22 கவிஞர்கள் கலந்துகொண்ட வித்தியாச நிகழ்வு
‘உடும்பன்’ பாடல் வெளியிட்டு விழாவில்
உணர்ச்சிகரமாக பேசிய கவிஞர்கள்

இப்படி ஒரு விழா இதுவரை நடந்ததும் இல்லை இனி நடக்கப்போவதும் இல்லை. அப்படியான அபூர்வ நிகழ்வாகவும் நெகிழ்வாகவும் அமைந்தது ‘உடும்பன்’ பாடல் வெளியீட்டு விழா.

எஸ்.பாலன் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கி, இசையமைத்துள்ள படம் ‘உடும்பன்’. இந்தியாவின் நம்பர் ஒன் பைக் ரேஸரான திலீப் ரோஜர் இப்படத்தின் நாயகனாக நடித்துள்ளார். கதாநாயகிகளாக சனா, கீத்திகா நடித்துள்ளனர். படத்தில் புரட்சி கவிஞர் பாரதிதாசனின் 5 பாடல்களும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் இரண்டு பாடல்களும் இடம்பெற்றுள்ளது.

படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. திரை உலக வரலாற்றில் முதன்முறையாக 22 கவிஞர்கள் கலந்துகொண்ட விழாவாக ‘உடும்பன்’ பாடல் வெளியீட்டுவிழா நடந்தது. புலவர் புலமை பித்தன், கவிக்கோ. அப்துல்ரகுமான் ஆகியோர் பாடல்களை வெளியிட, பாரதிதாசனின் மகன் கவிஞர்.மன்னர் மன்னன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மகன் கே.குமாரவேலு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் கவிஞர் பொன்னடியான், நா.காமராசன், பூவை செங்கூட்டுவன், அறிவுமதி உள்ளிட்ட மூத்த கவிஞர்களும்,பழநிபாரதி, நா.முத்துக்குமார், சினேகன், நெல்லை ஜெயந்தா, பிரியன் உள்ளிட்ட இந்த தலைமுறை இளம் பாடலாசிரியர்களும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

முன்னதாக வரவேற்புரை நிகழ்த்திய இயக்குனர் எஸ்.பாலன், “இந்த படத்தில் இடம்பெறும் புரட்சி கவிஞர் பாரதிதாசனின் பாடல் தேசவிரோதமாக உள்ளது என்றொரு சர்ச்சை எழுந்தது” என்று குறிப்பிட, அவரை தொடர்ந்து பேச வந்த கவிஞர்களின் பேச்சில், அனல் பறந்தது.

புலவர் புலமைப்பித்தன் பேசியபோது “இந்த படத்தின் பாடல் காட்சியை பார்த்தபோது முல்லிவாய்க்கால் சம்பவம்தான் நினைவுக்கு வந்தது. தமிழுக்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக அதிகமாக செயல்படுவது எந்த தேசம் என்றால் அது இந்திய தேசம்தான் என்று சொல்வேன். பாரதிதாசன் எழுதிய பாடலில் தேசவிரோதம் இருப்பதாக சொல்லி அதனை மறுத்ததாக சொன்னார்கள். நல்லவேளை அவரை இந்திய அரசாங்கத்திற்கு ஆதரவானவர் என்று சொல்லியிருந்தால்தான் நான் வருத்தப்பட்டிருப்பேன். இந்த படமும், பாடல்களும் தமிழ் உணர்வுடன் எடுக்கப்பட்டுள்ளதை நினைத்து நான் பெருமையடைகிறேன்.

இதில் பட்டுக்கோட்டை, பாரதிதாசனின் பாடல்களை கேட்கும்போது நான் ஆயிரம் பாடல்களை எழுதியது போல சந்தோஷப்படுகிறேன். படத்தின் நாயகன் திலீப் ரோஸர். எனது பேரன் பெயரும் திலீப் ரோஸர்தான். அவனும் பைக் ரேஸர்தான். அதனால் இந்த திலீப்பனையும் என் பேரனாக தத்தெடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இந்த படத்தை வெற்றிப்பெறச்செய்வதே, நாம் தமிழுக்கு செய்யும் கைமாறு” என்றார்.

கவிக்கோ அப்துல் ரகுமான் பேசுகையில், ”இங்கே கூடியுள்ள கவிஞர் பெருமக்களைப் பார்க்கும் போது மன நிறைவாக உள்ளது. நாங்கள் அனைவரும் வேறு வேறு முகாமில் இருந்தாலும், தமிழ் என்பது பொதுவான அடையாளமாக உள்ளது. முகாம் வேறு, முகம் ஒன்று.அத்தனை கவிஞர்களையும் ஒன்று சேர்த்த இயக்குநர் பாலனை பாராட்டுகிறேன்.

என்னிடம் இங்கே ஒரு கேள்வி கேட்டுள்ளனர். கவிதை ஆணா பெண்ணா என்றனர். என்னுடைய பதில், பெண்ணாக இருந்த கவிதையை ஆணாக்கிக் காட்டியவர் பாவேந்தர் பாரதிதாசன்! அந்த ஆணின் கையிலே ஆயுதம் கொடுத்து போராடச் சொன்னவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள். இவர்கள் எழுதிய இப்பாடல்கள் இடம்பெற்றுள்ள இப்படம் வெற்றி பெற்றால் தமிழ் இனம் வெற்றி பெற்றதாக அர்த்தம்” என்றார்.

கவிஞர் அறிவுமதி பேசியபோது , “தமிழுக்கு, தமிழ் கலாச்சாரத்திற்கு, தமிழர்களுக்கு ஆதரவான படங்கள் வரத்தொடங்கியுள்ளன. ”ஒன்பது நாடுகள் சேர்ந்து ஒரு நாட்டை அழிப்பது வீரமல்ல துரோகம்” என்று 7ஆம் அறிவு படத்தில் என் தம்பி முருகதாஸ் உரையாடல் எழுதியிப்பான். ஆனால் காலசுவடு போன்ற இதழ்கள் அதனை தவறாக விமர்ச்சித்திருந்தது.

கொலை வெறி போன்ற பாடல்கள் வெற்றி பெரும் இந்த சூழ்நிலையில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ‘உடும்பன்’ போன்ற முயற்சிகளை நாம் வாழ்த்தவேண்டும், வரவேற்க வேண்டும்” என்றார்.

மன்னர்மன்னன் பேசும்போது, “எனது தந்தை பாரதிதாசன், தமிழ் பண்பாட்டுக்கு விரோதமான செயல்பாடுகளை ஒருபோதும் அனுமதித்தது இல்லை. இன்றைக்கு ஆங்கிலம், தமிழ் கலந்து பாட்டு எழுதுகிறார்கள். கேட்டால் மக்கள் அதுபோன்ற பாடல்களைதான் விரும்புகிறார்கள் என்கிறார்கள். மக்கள் உங்களிடம் விண்ணப்பம் போட்டு கேட்டார்களா? மக்கள் இந்த பாடல்களை விரும்புகிறார்கள் என்பது அப்பட்டமான பொய்.

பாரதிதாசன் அவர்கள் தனது பாடலில் ஒரு வார்த்தையை மாற்றகூட அனுமதிக்கமாட்டார். அவரை எல்லோரும் கோபக்காரர் என்றுதான் சொல்வார்கள். தமிழுக்கு எதிராக பாடல் எழுத சொன்னால், எவ்வளவு பணம் கொட்டி கொடுத்தாலும் அந்த வாய்ப்பை நிராகரித்து விடுவார். இன்றைக்கு இளம்தலைமுறை பாடலாசிரியர்கள் அவரின் பாதையை பின்பற்ற வேண்டும்.” என்றார்.

முன்னதாக தயாரிப்பாளர் எஸ்.ஜெகநாதன் வரவேற்புரை ஆற்றினார். இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் சிறப்பு வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சிகளை மண்வாசனை கலந்த தமிழில் பேபி யாழினி தொகுத்து வழங்கினார்

மக்கள் தொடர்பு : செல்வற்கு

குமார் ஸ்ரீநிவாஸ்
புகைப்பட/புகைபடசுருள் நிருபர்

Advertisements