Actor Tarun Sathiriya still

தருண் சத்ரியாவின் தயக்கமும் ஷிகா தந்த தைரியமும்!

சண்டை கூட போட்டுடலாம்… டூயட் பாடறதுதான் ரொம்ப ரொம்ப கஷ்டம்! – தருண் சத்ரியா

தருண் சத்ரியாவின் தயக்கமும் ஷிகா தந்த தைரியமும்!

இன்றைய வளரும் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் தருண் சத்ரியா. தருண் கோபியால் காளை படத்தில் சிம்புவுக்கு வில்லனாக அறிமுகமானவர், இன்று தனி கதாநாயகன் அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.

சொந்த ஊர் வேலூருக்குப் பக்கத்தில் ஆம்பூர். இந்த மாவட்ட மக்களைப் பொறுத்தவரை தலைநகரம் பெங்களூர்தான். அருகிலிருப்பது ஒன்று, அதிக வாய்ப்புகள் கிடைப்பது இன்னொரு முக்கியமான காரணம் என்பதால் தருண் சத்ரியாவும் பெங்களூருக்குப் போய்விட்டார்.

இவர் தந்தை கன்னடத்தில் பல படங்களைத் தயாரித்துள்ளார். முதல் பட வாய்ப்பு தந்த இயக்குநர் தருண் கோபிதான், சுலீல் குமார் என்ற இவரது பெயரை தருண் சத்ரியாவாக மாற்றிவிட்டார்.

இந்தப் படத்துக்குப் பிறகு, அவர் நடித்த குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் அவருக்கு தனித்த அடையாளத்தைத் தந்தது. இந்தப் படத்தில் இவர் மெயின் வில்லன். பார்த்த அத்தனை பேரும் பாராட்டினர்.

அடுத்து தருண் நடித்தது ஆண்மை தவறேல். தொடர்ந்து சுந்தர் சியின் நகரம் படத்திலும் மெயின் வில்லன் வேடம். ஸ்டன்ட் மாஸ்டர் விஜயனின் சொந்தப் படம் மார்கண்டேயன் உள்பட அரை டஜன் படங்களைச் செய்த பின்னர், படம் பார்த்து கதை சொல் படத்தில் தருணுக்கு தனி நாயகன் வேடம் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் ஷிகா என்ற கன்னட நடிகை அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஆனால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற பிடிவாதம் எதுவும் அவரிடம் இல்லை. விளைவு இப்போது அவர் கைவசம் ஐந்து படங்கள்.

தருண் சத்ரியாவைச் சந்தித்தோம்…

அவர் அளித்த பேட்டி:

எந்தப் பின்னணியில் சினிமாவுக்கு வந்திருக்கிறீர்கள்?

எனக்கு எந்தப் பின்னணியும் இல்லை. வேலூர் மாவட்டத்தில் பொதுவாக கூத்து, நாடகம் என கலைகள் அதிகம். ஆனால் சினிமாவில் இந்த மாவட்டத்துக் கலைஞர்கள் அதிகமாக இல்லை. கடவுள் அருளால் எனக்கு இப்போது வாய்ப்புக் கிடைத்துள்ளது. என் தந்தை கன்னடத்தில் படம் எடுத்துள்ளார். ஆனால் அவர் உதவி எதுவும் எனக்குக் கிடையாது.

பெங்களூரில் மியூசிக் ஷாப் வைத்திருந்தேன். ஒரு கட்டத்தில் நமக்கு சினிமாதான் சரியாக வரும் என்று தெரிந்தது. அப்படியே ஒரு வருடம் நடிப்புப் பயிற்சி எடுத்தேன். தேவையான அளவு நடனம், ஸ்டன்ட் கத்துக்கிட்டேன். சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடியபோது, நண்பர்கள் மூலம் தருண் கோபி அறிமுகம் கிடைத்தது. நடிகனாகிவிட்டேன்.

வில்லனாக இருந்து ஹீரோவாகிவிட்டீர்கள்… டூயட்டெல்லாம் பாட வேண்டியிருக்குமே.. எப்படி உணர்கிறீர்கள்?

அதாங்க ரொம்ப கஷ்டம். வில்லனா சண்டை போடறது, சவால் விட்டுப் பேசறதெல்லாம் கூட ஓகே. ஆனா டூயட் பாடறது கஷ்டம்தான். டான்ஸ் போடணும், அப்படியே ஜோடியா நடிக்கிறவங்க உணர்ச்சியை கவனிக்கணும், அவங்க பாடி லாங்வேஜுக்கு ஏத்த மாதிரி மாறணும். இதெல்லாம் பெரிய சவால்தான்.

ஹீரோயின் ஷிகாவுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளதாக செய்திகள் வந்ததே…

அதெல்லாம் இல்லீங்க. இயக்குநர் சொன்னபடி நடித்தேன். உண்மையில் அந்தசக் காட்சிகளில் நடிக்க எனக்கு ரொம்ப தயக்கமாக இருந்தது. டூயட் பாடும்போதுகூட கொஞ்சம் கூச்சமாத்தான் இருந்தது. ஆனா ஷிகா ஏற்கெனவே கன்னடத்துல நடிச்சவங்க. அதனால என் தயக்கத்தைப் போக்கும் வகையில் நடந்துக்கிட்டாங்க.

உங்கள் நடிப்பைப் பார்த்து சக நடிகர்கள், இயக்கிய இயக்குநர்கள் பாராட்டியிருக்காங்களா…

வெளியில நண்பர்கள்தான் பாராட்டியிருக்காங்க. குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் நடிச்சப்போ தயாரிப்பாளர் எஸ்பிபி சரண், ‘இயற்கையா நடிக்கிறே… நீ பெரிய இடத்துக்கு வருவே…” என்று பாராட்டினார். இயக்குநர்கள் தருண் கோபி, சுந்தர் சி ஆகியோரும் பாராட்டியுள்ளனர். ஆனா சக நடிகர்கள் யாரும் பாராட்டவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை.

ஒரு படத்தை ஒப்புக் கொள்ளும் முன் கதை கேட்பீர்களா?

இல்லை. என் ரோல் என்ன என்று மட்டும்தான் கேட்பேன். இன்னும் நான் அந்த அளவுக்கு வளரவில்லை என்பது ஒரு காரண்ம். வளர்ந்த பிறகும் கூட, அவசியமென்றால் கதை கேட்பேன். மற்றபடி இயக்குநர்கள் சொன்னதைக் கேட்பேன்.

நடிச்சா இனி ஹீரோதான் என்று ஏதாவது கொள்கை வைத்திருக்கிறீர்களா?

இல்லையில்லை… ஹீரோவோ குணச்சித்திரமோ வில்லனோ… நல்ல வாய்ப்பாக, கதைக்கு தேவையான முக்கிய பாத்திரமாக இருந்தாலும் போதும். ஒவ்வொரு படியாக ஏறி, இந்த சினிமாவில் எனக்கும் ஒரு இடம் இருப்பதை உறுதி செய்துள்ளேன். இதுவே என்னைப் பொறுத்தவரை பெரிய சாதனை. நல்ல வாய்ப்புகளை தேடிப் போய் பயன்படுத்திக் கொள்ளவும் நான் தயார்.

இன்றைய இளம் நடிகர்களில் உங்கள் நண்பர்கள் யார்?

நடிகர்களை விட இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவி இயக்குநர்களில்தான் எனக்கு அதிக நண்பர்கள் உள்ளனர். காரணம், ஆரம்பத்திலிருந்தே நான் அவர்களுடனே இருப்பதால் கூட இருக்கலாம். உண்மையில், காளை முடித்த பிறகு நான் உதவி இயக்குநராக ஏ எம் ரத்னம் தயாரித்த நீ ஓட நான் துரத்த படத்தில் வேலை பார்த்தேன். இதை இயக்கியவரும் தருண் கோபிதான். பின்னர் இந்தப் படம் கைவிடப்பட்டுவிட்டது. எனக்கும் குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் வாய்ப்பு வந்தது.

கிணற்றில் விழுந்து உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது என்றார்களே… என்ன நடந்தது?

பத்திரிகைகளில் வந்தது போல அல்ல. அதைவிட மிக சிக்கலான காட்சி. மயங்கினேன் தயங்கினேன் படத்துக்காக கம்பம் பக்கத்தில் ஒரு கிணற்றுத் தண்ணீருக்குள் நான்கு பேருடன் நான் சண்டை போடுவது போல காட்சி. தண்ணீருக்குள் சண்டை போடும்போது, என்னுடன் நடித்தவர்கள் பயத்தில் என் கை, கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். இதனால் என்னால் மேலே வந்து கையை ஆட்டி உதவி கேட்கக் கூட முடியவில்லை. நிறைய தண்ணீர் குடித்து மயங்கிவிட்டன். உயிர் போய்விடுமோ என்ற ஆபத்தான கட்டத்தில் ஒரு எம்பு எம்பி தண்ணீருக்கு மேல் கையை ஆட்ட, உடனே என்னைக் கட்டியிருந்த கயிறைப் பிடித்திழுத்தனர். 2 மணி நேரம் மூச்சுப் பேச்சின்றி கிடந்து பின்னர் பிழைத்தேன். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிட்டேன்,” என்றார்.