பிரபலங்களின் குரு -சௌம்யா மதன கோபால்

விதையில் விருட்சத்தை ஒளித்து வைத்திருப்பதைப் போல எல்லாரிடமும் ஒரு திறமையை ஒளித்து வைத்திருக்கிறான் இறைவன்.

ஆனால் சிலர் மட்டுமே தன்னிடம் உள்ள திறமையைக் கண்டு பிடிக்கிறார்கள். அப்படி ஒருவர் தான் சௌம்யா மதன கோபால். இவர் ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டுமல்ல பல்துறையில் பன்முகத்திறமை பெற்றவர்.

இவர் ஒரு இந்துஸ்தானி இசைக் கலைஞர். இது நாடறிந்த நல்ல முகம். இது மட்டுமல்ல பாடகி,சபா கச்சேரி நடத்துனர், ஒவியக் கண்காட்சி நடத்துநர்,கர்நாடக இசைக்கலைஞர்,வீணை வித்துவான்,குரல் பயிற்சியாளர்,இசையாசிரியை,தடகள வீராங்கனை,வெளிநாட்டு விருது வென்ற வெற்றியாளர் என்று இவரது பல முகங்கள் வியப்பூட்டுகின்றன.

இசைப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் சௌம்யா மதன கோபால். பிரபல இசைமேதை ஜி.என்.பாலசுப்ரமணியம் அவர்களின் தங்கை மகள்தான் இந்த சௌம்யா. கர்நாடக இசைப் பின்னணியில் பிறந்த சௌம்யாவுக்கு கர்நாடக சங்கீதம் தெரியும். அதுமட்டுமல்ல இந்துஸ்தானி இசையின் செழுமையில் மனதைப் பறிகொடுத்தார். நாட்டமும் சென்றது.

கர்நாடக இசை குடும்ப சொத்தாக வீட்டிலேயே இருந்தது. எனவே தன் தாயாரிடமே கற்றுக் கொண்டார். கூடுதல் செல்வமாக வடஇந்திய பாரம்பரிய இசையான இந்துஸ்தானியைக் கற்றுக் கொண்டார். இதற்காக வடநாட்டு பண்டிதர்களிடம் பாடம் பயின்றார். குரு கிருஷ்ணானாந்த். இவரது முக்கிய ஆசான், முகமது உசேன்கான்,விஸாம்பர் நாத் சர்மா, மீரா சவூர் இவரது திறமையை வளப்படுத்தியவர்கள்.

சௌம்யாவின் இசையார்வத்தையும் ஈடுபாட்டையும் உணர்ந்த கிருஷ்ணானந்த் இந்துஸ்தானியின் ஆழ அகலங்களை சொல்லிக் கொடுத்தார். 1980ல் இந்துஸ்தானி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்த சௌம்யா, ஏராளமான கச்சேரிகள் செய்துள்ளார். இவர் காலடி படாத சபாக்களே இல்லை என்று கூறுமளவுக்கு இசை பரப்பியுள்ளார். ஜெர்மன் கலாச்சார நிகழ்ச்சிகளிலும் கச்சேரி செய்துள்ளார். மொழி தெரியாத வெளி நாட்டினரும் இவரது இசையில் ராக ஆலாபனையில் கட்டுண்டு மயங்கிக் கிடக்கிறார்கள்.

இவரது இசை ஈடுபாடு நாடகளுக்கு இசையமைக்கும் வாய்ப்பில் கொண்டு போய் நிறுத்தியது. நவீன நாடகங்களில் இவரது பங்களிப்பு கணிசமான அளவில் இருந்தது. சபா நாடங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நவீன நாடகங்கள், நவீன நாடகங்களை தன் இசையால் ஜனரஞ்சகப்படுத்தி மக்கள் வயப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. பிரிட்டிஷ் கவுன்சில் மாக்ஸ் முல்லர் பவன்,பிரெஞ்சு கலாச்சாரக் கழகம் போன்றவற்றில் நவீன நாடகங்கள் நடத்துவோர் தங்களின் படைப்புகளுக்கு இசையமைக்க சௌம்யாவையே நாடுகிறார்கள். அந்த அளவுக்கு பாரம்பரியத்துக்கும் நவீனத்துக்கும் பாலமாக் இருக்கிறார் சௌம்யா.

வீணை நன்றாக வாசிக்கும் இவரது குரு வீணை வித்துவான் பிச்சுமணி.

தன் ராக ஆலாபனைகளால் ரசிகர்களின் செவிகளில் புகுந்து இசையோவியம் தீட்டும் இவர். நிஜ ஒவியரும் கூட, அந்தோணிதாஸ். எச்.வி.ராம் கோபால் போன்ற ஓவிய மேதைகளிடம் ஓவியம் பயின்றிருக்கிறார். சென்னையில் பல இடங்களில் ஓவியக் கண்காட்சிகள் நடத்தியிருக்கிறார். பாராட்டுகளையும் பரிசுகளையும் பெற்றிருக்கிறார் இவரது சிறப்பு உருவப் படங்கள் (Portrait) வரைவது. இத்துறையில் தனி ஈடுபாடு இவருக்கு இசையால் செவிகளுக்கும் ஓவியத்தால் கண்களுக்கும் விருந்தளித்து வரும் இவர். கருத்தால் உள்ளங்களுக்கும் உவகை அளிப்பவர். கல்லூரி நாட்களில் பேச்சு போட்டி கட்டுரைப் போட்டிகளில் பரிசுகளை அள்ளியவர்.

இந்துஸ்தானி பாணியில் மிகவும் கடினமாக பிரிவுகளை சுத்த சாரங் ராகத்தில் சற்றும் சளைக்காமல் இலகுவாக் வழங்கி ரசிகர்களை ஈர்ப்பது இவருக்கு கை வந்த கலை பஜன்கள் பாடி சங்கீத கலைஞர்களை ஒரு புனித உலகத்துக்கு அழைத்து செல்வதில் அலாதி பிரியம் இவருக்கு, குறிப்பாக மீராபாய் பஜன் பாடும் போது கேட்பவர் மனம் அள்ளும்.

தன் இன்பமும் ஈடுபாடும் அனுபவமும் தன்னுடன் நின்று விடக் கூடாது என்று நினைத்த சௌம்யா, “ராகசுரபி” என்கிற இசைப்பள்ளி தொடங்கி நூற்றுக்கணக்கானவர்களுக்கு இந்துஸ்தானி இசையை கற்பித்து வருகிறார். ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ இப்பள்ளியை ஒருகல்லூரியாக வளர்க்கும் கனவுடன் இருக்கிறார்.

இவரது மறக்க முடியாத கச்சேரி ?

‘எனது இந்துஸ்தானி இசைக் கச்சேரி சீனிவாச சாஸ்திரி ஹாலில் நடந்தது. கர்நாடக சங்கீத உலகின் ஜாம்பவாங்கள் செம்மங்குடி சீனிவாச ஐயர், மறைந்த இசை மேதை புரொஃபஸர் எஸ்.ராமநாதன், திரு.ஒய்.ஜி.பார்த்தசாரதி போன்றவர்கள் முன்னிலையில் கச்சேரி நடந்தது. அவர்களின் முன்னால் செம்மங்குடி மேடையேறி வந்து பாராட்டியது பெரும் பாக்கியம்’ என்றார்.

சௌம்யா மதன கோபால் குறிப்பிடும் இன்னொரு அனுபவம்…
‘முஸ்லீம் அசோசியேஷன் ஆஃப் மதராஸ் சிட்டி சார்பில் ஒரு கஜல் கச்சேரி, பாகிஸ்தானின் கஜல க்வீன் முன்னி பேகம் முன்னிலை அது மிர்ஸா காலிப் பின் நூற்றாண்டு விழா. ரசிகர்களை கஜல் இசையில் ஊறியவர்கள். அவர்கள் மத்தியில் நான் பாடியது மறக்க முடியாத நிகழ்ச்சி. அவர்கள் விரும்பிக் கேட்ட குலாம் அலியின் ‘கப் கே கப்கே ராத்மே…’ மெஹ்தி ஹசனின் ரஞ்சீஷி சங்கித் யமன் கல்யாணி ராகத்தில் , பிறகு ரூறா லைலா இன் கஜல்கள் – பூப் ராகத்தில், மோகனராகம் – பாத் கஹீமுஜே முஷ்கில்’ எல்லாம் நான் மெய்மறந்து பாடியவை. இன்று நினைத்தாலும் இனிக்கிறது’ என்றார் சிலிர்ப்புடன்.

கர்நாடக இசையில் பிறந்து வீணை வாசிப்பில் இந்துஸ்தானி இசையில் வளர்ந்து சிறந்தவர் சௌம்யா மதன கோபால். இன்று தன் திறமையால் பல உயரங்ககளைத் தாண்டியுள்ள இவர் பள்ளி நாட்களில் உயரம் தாண்டுதலில் (High Jump) மாநில அளவிலான பரிசுகளைக் குவித்தவர்.

பல இசை மேதைகளைச் சந்தித்தது போல மேல் மருவத்தூர் பங்காரு அடிகளாரைச் சந்தித்ததும் இவரால் மறக்க முடியாதது. ஆதிபராசக்தி மேல் பாடல்கள் பாடி பங்காரு அடிகளால் வெளியிடச் சொன்னார். இவரும் 4 ஒலிப்பேழைகள் வெளியிட்டுள்ளார்.

‘கங்கா’ என்கிற குறும்படத்துக்கு இசையமைத்துள்ளார். பாடியுள்ளார். இதற்காக பிரான்ஸ் நாட்டு அரசு ‘கிராண்ட் ப்ரி’ என்கிற விருதை சௌம்யாவுக்கு வழங்கியுள்ளது.

‘இலக்கணம்’ தமிழ்த் திரைப்படத்திலும் பாடி இருக்கிறார். ‘வோடபோன்’ மொபைல் நிறுவனத்துக்காக திருக்குறளை இசை கலந்து பாடியுள்ளார்.

சுமார் 30 ஆண்டுகளாக கச்சேரிகள் செய்து வரும் இவர், பல மாணவிகளை உருவாக்கி வளர்த்து வருகிறார் பிரபல பின்னணிப் பாடகர்களாக இருக்கும் ஷாலினி,ஹரிசரண்,மதுமிதா,பவதாரணி போன்றவர்கள் இவரது தயாரிப்புகளே இவர் கஜல்,பஜன்,மராட்டிய அபங்க் போன்ற இசை வடிவங்களையும் தன் கச்சேரிகளில் வழங்கி வருகிறார்.

இவரது வளர்ச்சிக்கும் புகழுக்கும் பெருமைக்கும் பின் நின்று ஊக்கப்படுத்தும் கணவர் மதனகோபாலின் அன்பையே காரணமாக கூறுகிறார். எனவே கச்சேரிகளில் பாடமட்டுமல்ல நிஜத்திலும் கூற முடிகிறது. ‘குறையொன்றுமில்லை’ என்று

Advertisements