வாலி எழுதிய பிரம்மோதஸவப் பாடல்களை தமிழக ஆளுனர் வெளியிட்டார்
திருப்பதியில் பிரம்மோஸ்தவம் வெகுவிமரிசையாக அனுஷ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில்,திருப்பதிக்கு அதிக எண்ணிக்கையில் வருகை தரும் தமிழக பக்தர்களை கெளரவிக்கும் விதமாக திருப்பதி தேவஸ்தானம் அமைப்பு பிரம்மோஸ்தவப் பாடல்களை அழகு தமிழில் வெளியிட்டுள்ளது.மூத்த கவிஞர் வாலி எழுதிய முத்தான பத்து பக்திப் பரவசமூட்டும் பாடல்களுக்கு அற்புதமாக இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் வித்யாசாகர். திருப்பதி தேவஸ்தான அமைப்பின் தலைவர் ஆனந்த குமார் ரெட்டி தலைமையிலான உறுப்பினர்களின் முயற்சியில் உருவான பிரமாண்ட நாயகனின் பிரம்மோஸ்தவம் என்கிற தமிழ்ப் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டினைத் தமிழக ஆளுனர கே.ரோசையா இன்று சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள திருப்பதி கோவிலில் வைத்து வெளியிட்டார்.
பிரமாண்ட நாயகனின் பிரம்மோத்ஸவம் என்கிற தலைப்பில் திருப்பதி ஏழுமலையானைப் பற்றிய பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டினை வெளியிட்டுப் பேசிய தமிழக கவர்னர் ஆர்.ரோசையா, “தமிழில் பிரம்மோத்ஸவம் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டினை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். திருப்பதியில் வெகுவிமரிசையாகப் பிரம்மோத்ஸவம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் மிகவும் குறுகிய காலத்தில் இந்த குறுந்தகட்டினைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
தமிழில் கொண்டுவருவதென்பது இதுதான் முதல்முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல்களை ஏற்கனவே தெலுங்கில் கேட்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது, உண்மையில் அவை ஆத்மாவைக் கட்டிப்போடுபவை.
திருப்பதிக்கு வரும் பக்தர்களில் 30 முதல் 40 சதவிகிதம் பேர் தமிழர்களே என்று அறியும் போது மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களுக்காக பிரம்மோத்ஸவம் பாடல்களைத் தமிழில் கொண்டுவந்த திருப்பதி தேவஸ்தான அமைப்பிற்கும் சென்னையில் இருக்கும் அதன் பிரதி நிதிகளுக்கும் எனது பாராட்டுகள்.
பிரமாண்ட நாயகனின் பிரம்மோத்ஸவம் பாடல்களை எழுதிய கவிஞர் வாலியை வாழ்த்துகிறேன். அவர் இந்தப் பாடல்களை மிகவும் பக்தி பரவசத்தோடு எழுதியிருக்கிறார். இந்த பக்திப் பாடல்களுக்கு மிகவும் அற்புதமாக இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.
திருமலா திருப்பதி தேவஸ்தான கோயிலை மிகவும் அற்புதமாகப் பராமரித்துக் கொண்டும் கன்னியாகுமரியில் திருப்பதி தேவஸ்தான கோயிலை ஒரு திவ்ய ஷேத்திரமாக நிறுவுவதற்கு முயற்சி செய்து கொண்டும் இருக்கும் ஆனந்த் குமார் ரெட்டி தலைமையிலான உறுப்பினர்களுக்கு
எனது வாழ்த்துகள்…அனைவருக்கும் கடவுள் வெங்கடேஸ்வரனின் அருள் கிடைக்கட்டும்” என்று பேசினார்.பாடல்கள் எழுதிய வாலிக்கும் இசையமைத்த வித்யாசகாருக்கும் ஆளுனர் தங்க மெடல் அணிவித்தார்.
நிகழ்ச்சியில் திருமலா திருப்பதி தேவஸ்தான அமைப்பின் தலைவர் ஆனந்த்குமார் ரெட்டி, யூ வி ஸ்ரீ வேலுக்குடி கிருஷ்ணன், டாக்டர் பத்ரி நாத், சின்னதுரை, டாக்டர் பிரேமா பாண்டுரங்கா, சேஷாயி ஆகியோருடன் மூத்த தமிழ்சினிமா இயக்குனர் சிவி ராஜேந்திரன் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் உட்பட ஏராளமான முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பிரமாண்ட நாயகனின் பிரம்மோஸ்தவம் – தமிழ் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு திருமலா திருப்பதி தேவஸ்தானங்களில் கிடைக்கும்.

PRO’SELVARAGHU

Advertisements